யாழில் 8 பேருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது? -உறுதியாக கூறமுடியாது: சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

யாழில் 8 பேருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது? -உறுதியாக கூறமுடியாது: சத்தியமூர்த்தி-

யாழில் நேற்று அடையாளப்படுத்தப்பட்ட 8 பேருக்கும் எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை உறுதிப்படுத்தி செல்ல முடியாது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார்.

சுவிஸ் மத போதகரால் அவர்களுக்கு தொற்றியதா? அல்லது தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து முன்னர் அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த மாதம் 22ம், 23ம் திகதிகளில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் சுவிஸ் மத போதகருடன் மிக நெருக்கமாக பழகியிருந்தவர்கள்.

இவர்களிடம் கடந்த 1ம், 3ம் திகதிகளில் நடந்த 1ம் கட்ட பரிசோதனையில் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அன்றிலிருந்து 11 நாட்கள் கழித்து நேற்று நடாத்தப்பட்ட பரிசோதனையின்போது 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.   

இவர்களுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது? என்பதை உறுதியாக கூற முடியாது. 1ம் கட்ட பரிசோதனையின்போது தொற்றுக்குள்ளான 6 பேரிடமிருந்து கூட இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்.
Previous Post Next Post