வெலிசறை சிப்பாயால் முல்லைத்தீவு படையனருக்கு வந்த ஆபத்து!! -60 பேரை தனிமைப்படுத்த அவசர நடவடிக்கை- - Yarl Thinakkural

வெலிசறை சிப்பாயால் முல்லைத்தீவு படையனருக்கு வந்த ஆபத்து!! -60 பேரை தனிமைப்படுத்த அவசர நடவடிக்கை-

விடுமுறையை முடித்துக் கொண்டு வீட்டில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள படைமுகாங்களுக்கு கடமைக்கு திரும்பிய 60 படையினரை தனிமைப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த படையினர் வந்த பேருந்தில் வெலிசறை முகாமை சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேர்ந்து பயணித்துள்ளார். குறித்த சிப்பாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 60 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 38 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அந்தப் பேருந்தில் விடுப்பில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார். அவர் அநுராதபுரம் சிறிபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தப் பேருந்து வெலிஓயா, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 60 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர்.

அவர்களை இனங்கண்டு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தலில் வைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post