சிகரெட் பிடித்த சிறுவனை வீடியோ எடுத்து மிரட்டி களவு எடுக்க வைத்த கும்பல்!! -வல்வெட்டித்துறையில் 5 பேர் கைது- - Yarl Thinakkural

சிகரெட் பிடித்த சிறுவனை வீடியோ எடுத்து மிரட்டி களவு எடுக்க வைத்த கும்பல்!! -வல்வெட்டித்துறையில் 5 பேர் கைது-

வல்வெட்டித்துறை பகுதியில் 15 வயது சிறுவன் சிகரெட் புகைத்ததை வீடியோடு பதிவு செய்த கும்பல் ஒன்று அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோம் என்று மிரட்டி பல வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட வைத்துள்ளனர்.

இதன்படி குறித்த சிறுவன் தன்னுடைய வீடு உட்பட 3 வீடுகளிற்குள் புகுந்து சுமார் எட்டரை இலட்சம் பெறுமதியான நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்து அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சிகரெட் புகைப்பதை வீடியோ எடுத்த கும்பல் ஒன்று அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோம் என்று கூறி அச்சுறுத்தியுள்ளது.

குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றாமல் இருப்பதற்கான அச் சிறுவனின் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தினை யாருக்கும் தெரியாமல் தம்மிடம் கொண்டுவந்து தருமாறு அக் கும்பல் சிறுவனை களவு செய்ய நிர்ப்பந்தித்துள்ளது.

அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்த சிறுவன் தன்வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தினை களவாடிக் கொண்டு சென்று கும்பலிடம் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஊடரங்கு அமுலில் உள்ள நிலையில் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் ஓட்டினை உடைத்து உள்நுழைந்த கும்பல் அங்கிருந்தும் நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகைள் உடுப்பிட்டியில் உள்ள நகை கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் சில நகைகள் உடுப்பிட்டி மக்கள் வங்கிக் கிளையில் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின் நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post