ஊடகவியலாளர் ரூபனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! -பொன்னாலையில் இடம்பெற்றது- - Yarl Thinakkural

ஊடகவியலாளர் ரூபனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! -பொன்னாலையில் இடம்பெற்றது-

ஊடகவியலாளர் அமரர் சி.செ. ரூபனின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் பொன்னாலையில் இன்று (25) மாலை எளிமையாக இடம்பெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக மிக எளிமையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், ரூபனின் சில நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

ரூபனின் நினைவேந்தலை முன்னிட்டு தென்னங்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.

1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதயன் பத்திரிகையின் ஊடாக ஊடகத்துறைக்குள் கால் பதித்த ரூபன் தினக்குரல், வலம்புரி, ஈழநாதம் ஆகிய ஊடகங்களின் செய்தியாளராகவும் பணியாற்றினார். குறிப்பிட்ட காலம் புலிகளின் குரல் வானொலியின் யாழ்.செய்தியாளராகவும் பணி புரிந்தார்.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த காலத்தில், படையினரதும் புலனாய்வாளர்களதும் துணை ஆயுதக் குழுக்களினதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக  பணியாற்றினார்.

வன்னி யுத்தத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை குறித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த ரூபன், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சுகயீனம் காரணமாக சாவடைந்தார்.
Previous Post Next Post