கொரோனாவால் இறந்தவரால் பலர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம்!! - Yarl Thinakkural

கொரோனாவால் இறந்தவரால் பலர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம்!!

கொரோனாவால் நேற்று உயிரிழந்தவர் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் இருந்து வேறு பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற வலுத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த நோயாளியின் விவரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் நீண்டகாலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்து வருகிறார். அத்துடன், அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.

அவரது மகன்கள் இருவரும் வியாபார நோக்கங்களுக்கான கடந்த பெப்ரவரியில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த நோயாளி நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் கோரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படாமலேயே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
Previous Post Next Post