அநுராதபுரம் சிறை கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!! -ஒருவர் சாவு: 5 பேர் படுகாயம்- - Yarl Thinakkural

அநுராதபுரம் சிறை கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!! -ஒருவர் சாவு: 5 பேர் படுகாயம்-

அநுராதபுரம் சிறைச்சாலையல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏஙற்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக கைதிகள் சிறை வாயிலை உடைத்து வெளியேற முயற்சித்தனர் என்றும், அதனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இன்று சனிக்கிமை மாலை நடந்த குறித்த சம்பவத்தால் அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கோரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 2 பேரை அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் இன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நான்கு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் சிறையில் உள்ள சுமார் 350 கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளுடன் சிறை வைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து சிறையின் முன் வாயிலை உடைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் அங்கு சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். கைதிகளை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post