கல்வி ஒன்றே தமிழர்களின் மூலதனம்: அழிவடையக் கூடாது -கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் மணிவண்ணன்- - Yarl Thinakkural

கல்வி ஒன்றே தமிழர்களின் மூலதனம்: அழிவடையக் கூடாது -கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் மணிவண்ணன்-

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்திற்கு கல்வி ஒன்றே மூலதனம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

வறுமையில் கல்வியை தொடர முடியாத நிலை எவருக்கும் வரக்கூடாது என்ற கொள்கையில் எமது தமிழ் கட்சியின் கல்வி மேம்பாட்டு பிரிவு செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஊடாக   தென்மராட்சி கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிகிழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்து வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் பெரும் சொத்தாகக் கருதப்படும் கல்வியை அழித்து ஒழிப்பதன் மூலம்  தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விடலாமென செயற்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கம்தான்  தமிழர்களின் உயர் கல்வி வாய்ப்பை பறித்த தரப்படுத்தல் முறையாகும்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ள எமது சமூகம் கல்வியிலே பின்தங்கி செல்லுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்வியே எமது மூலதனம் என செயற்பட்டுவரும் எமது அரசியல் இயக்கம் வறுமையில் கல்வியை தொடர முடியாத நிலையில் எவரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக எமது கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்களை தமிழர் தாயகம் எங்கும்    செய்துவருகிறது.

எமது எதிர்கால சந்ததி சிறந்து விளங்குவதற்கு எமது சிறார்கள் கல்வியிலே சிறப்பான நிலையை அடைய வேண்டும். எமது பெற்றோர் தமது பிள்ளைகள் கல்வியிலே சிறப்பாக செயற்பட ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்.

இன்று எமது தாயகத்திலே நடந்தேறுகின்ற போதைப் பொருள் கலாச்சாரம் வாள் வெட்டு கலாச்சாரம் என்பவற்றிலிருந்து எமது தேசம் விடுபட்டு கல்வியில் சிறந்த பண்பட்ட தேசமாக மிளிர வேண்டும். அதற்கு எமது அரசியல் இயக்கம் தனது சக்திக்கும் அப்பாற்பட்டு செயற்படும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் ஜெயக்குமார், நடனதேவன், ரமேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் விஜயேந்திரன் கனகசபை விஸ்ணுகாந் எனப் பலரும் கலந்து கொண்டனர்கள்.
Previous Post Next Post