பருத்தித்துறை கடை எரிப்பு; சந்தேகநபர்!! -தீ மூட்டியவாறு ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு- - Yarl Thinakkural

பருத்தித்துறை கடை எரிப்பு; சந்தேகநபர்!! -தீ மூட்டியவாறு ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு-

வடமராட்சி பருத்தித்துறை நகரில் பான்சி கடை எரிப்பு சம்பவத்தில் தேடப்பட்டுவந்த நபர் தனக்கு தானே தீ மூட்டியவாறு தொடருந்து முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை பன்னங்கட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகரம் ராஜசீலன் (வயது 32) என்பவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை சந்தை கட்டடத் தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவை கடை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது. அதனால் கடையில் இருந்த சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான உடுபுடவைகள் மற்றும் பான்சி பொருள்கள் என்பன எரிந்து நாசமானது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் , அருகில் இருந்த கடையின் சிசிரிவி கமரா பதிவுகளின் அடிப்படையில் எரிக்கபட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே தீ மூட்டி தப்பி செல்வதனை ஆரம்ப கட்ட விசாரணைகளின் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் தலைமறைவாகி இருந்தார்.

இந்தநிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தி இருந்தனர்.

சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை. 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் முன்பாக தனக்கு தானே தீ மூட்டியவாறு பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post