-யாழ்.நீதிமன்றத்தில் உறுதியெடுப்பு நிகழ்வு- - Yarl Thinakkural

-யாழ்.நீதிமன்றத்தில் உறுதியெடுப்பு நிகழ்வு-

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் உள்பட உத்தியோகத்தர்கள் பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வீ.ரி.சிவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், கணக்காளர்  வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள்  முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
Previous Post Next Post