தேசிய கீதத்தை தமிழர்கள் பாடக்கூடாது!! -கூறுகிறார் சுமந்திரன் எம்.பி- - Yarl Thinakkural

தேசிய கீதத்தை தமிழர்கள் பாடக்கூடாது!! -கூறுகிறார் சுமந்திரன் எம்.பி-

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்ற அரசின் அறிவிப்பு, தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படுமென துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்த கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம் பாடவேண்டாம் என்பதையே கூறுகின்றனர். தமிழர்கள் தேசிய கீதம் பாடக்கூடாது எனக் கூறினால் அதனை நாம் சந்தோசமாக ஏற்றுக்கொள்வோம்.

தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ளன.

நியாயமான, ஜனநாயக கோரிக்கைகள் ஏற்கப்படாமையின் காரணமாகவே தேசிய வாழ்க்கையிலிருந்து எம்மை விளக்கியதாக நாம் எண்ணுகிறோம்.

தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதன் இன்னொரு அடையாளமே தேசிய கீதம் பாட வேண்டாமென அரசாங்கம் கூறுகின்றதாகும். தமிழில் தேசிய கீதம் பாடுவதையும் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

இதன்மூலம் ஒரு நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை அரசாங்கம் முறியடிக்கின்ற செயற்பாட்டை அரசாங்கம் செய்து வருகிறது என்றார்.
Previous Post Next Post