சிப்பாயின் கழுத்தறுத்து துப்பாக்கி பறிப்பு!! -சக சிப்பாய்கள் இருவர் கைது: துப்பாக்கியும் மீட்பு- - Yarl Thinakkural

சிப்பாயின் கழுத்தறுத்து துப்பாக்கி பறிப்பு!! -சக சிப்பாய்கள் இருவர் கைது: துப்பாக்கியும் மீட்பு-

வவுனியா இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு ஆயுதம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த படைமுகாமைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள 7 வது சிங்க றெஜிமென்ட் இராணுவ முகாமின் முன்னரங்கில் கடமையாற்றிய குறித்த சிப்பாய் இன்று அதிகாலை 4 மணிக்கு பணியினை முடித்துவிட்டு படை முகாமிற்கு சென்றுள்ளார்.

அவரை வழிமறித்த இருவர் அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் இராணுவ முகாமைச் சேர்ந்த எம்.ரத்நாயக்க வயது 24 என்ற சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் படை முகாமை சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இராணுவ பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கெக்கிராவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ரி-56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் குறித்த படை முகாமில் சமையல் பகுதியில் பணியாற்றி வருபவர் என தெரிவித்த பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதே இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
Previous Post Next Post