புலிகளின் அழிவு நல்லது என்ற கருத்திற்கு கண்டனம்!! -சம்பந்தன் மீது பாயும் சிறிகாந்தா- - Yarl Thinakkural

புலிகளின் அழிவு நல்லது என்ற கருத்திற்கு கண்டனம்!! -சம்பந்தன் மீது பாயும் சிறிகாந்தா-

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா கூறியுள்ளார்.

புலிகள் அழிக்கப்பட்டமை எந்த வகையில் நல்ல விடயம்? யாரை திருப்திப்படுத்த சம்பந்தன் இவ்வாறான கருத்தை கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.

யாழ்.நல்லூர் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு விடயம் என சம்பந்தன் கூறியமை ஓர் பாரதூரமான கருத்து.

கூட்டமைப்பின் தலைவராக அதிலும் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பெருந்தலைவராக கூறப்பட்ட அவரது வாயில் இருந்து இவ்வாறான கருத்து வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
Previous Post Next Post