வல்வெட்டித்துறையில் சிறுமி வன்புணர்வு!! -பூசகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு- - Yarl Thinakkural

வல்வெட்டித்துறையில் சிறுமி வன்புணர்வு!! -பூசகர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

வல்வெட்டித்துறையில் தரம் 4இல் கல்வி பயிலும் 9 வயது சிறுமிய பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலும் வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி  பாடசாலையில் சிறுமி அலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் அலைபேசி மூலம் பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.

அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒருதொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின்  அலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்  72 வயது அர்ச்சகரும் சிறுமியின் சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டனர். குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஸ்ம் முன்னிலையானார்கள். சிறுமியின் வாக்குமூலமும் அவரது சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

முதலாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, பிணை விண்ணப்பம் செய்ய மன்றின் அனுமதி கேட்டார். சிறுமியின் நலன்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ்ம் தனது ஆட்சேபனையை முன்வைக்க மன்றின் அனுமதியைக் கோரினார்.

சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை மன்றுக்கு கிடைக்காத்தால் பிணை விண்ணப்பத்தை நிரந்தர நீதிவான் முன்னிலையில் முன்வைக்க அறிவுறுத்திய பதில் நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.
Previous Post Next Post