மனைவி அடித்துக் கொலை!! -கணவருக்கு 7 வருட கடூழிய சிறை- - Yarl Thinakkural

மனைவி அடித்துக் கொலை!! -கணவருக்கு 7 வருட கடூழிய சிறை-

மனைவியை அடித்து கொலை செய்த கணவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிளிநொச்சி திருநகரில் 2012ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி யோகலிங்கம் பிரேமினி என்ற 5 பிள்ளைகளின் தாயார் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து கணவரான கந்தையா யோகலிங்கம் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அங்கு நடந்த குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் 2019 ஜூன் 7ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விளக்கத்துக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் முன்னிலையானார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

எதிரி தனது சொந்த மச்சாள் பிரேமினியை காதலித்து திருமணமாகியுள்ளார் என்று சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இருவருக்கும் இடையே தீர்க்கப்படாத சிக்கல் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் மற்றும் இதர விடயங்கள் பற்றிப் பேசவேண்டும் என அழையா விருந்தாளியாக பிரேமினியின் வீட்டுக்குச் சென்ற எதிரியுடன், பிரேமினி தர்க்கப்பட்டுள்ளார் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட கோபாவேசத்தில் தன்னிலையிழந்து, எதிரி குறித்த பிரேமினியை பொல்லால் தாக்கியிருந்தார்.

அதனை அயலவராகிய சகாயநாதன் அன்னமேரி கண்டிருக்கிறார். இந்த இடத்தில் எதிரியினால் புரியப்பட்ட செயல் திட்டமிடப்பட்டு பிரேமினியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் புரியப்பட்டதா? என்பது வினாவாகின்றது.

எனவே எதிரி அவரது மனைவி பிரேமினியை கொலை செய்யும் குற்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை என்றும் திடீரென ஏற்பட்ட தர்க்கத்தின் போது விளைந்த தன்னிலையிழப்பு, திடீர் கோபாவேசம் என்பன காரணமான செயற்பாட்டின் விளைவாகவே பிரேமினி தாக்கப்பட்டு அவருடைய உயிரிழப்பு ஏற்பட்டதாக மன்று, மன்றின் மொத்த சாட்சிகளின் பகுப்பாய்வின் மூலம் தீர்மானத்தை கொள்கின்றது.

எனவே எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு குற்றமற்றவர் எனக் காணப்படுகிறார். ஆயினும் மன்றின் தீர்மானத்தின் அடிப்படையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு குறைந்த குற்றச்சாட்டாகிய தண்டனைச் சட்டக்கோவை 297ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய கொலையாகாத குற்றத்துக்கு இடமான மனித உயிர் போக்கல் என்ற குற்றத்தை இழைத்த குற்றச்சாட்டு எதிரி குற்றவாளியாகக் காணப்படுகிறார் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. அதனைச் செலுத்தத் தவறின் 5 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.
Previous Post Next Post