வித்தியா கொலையாளி சுவிஸ்குமார் தப்பியமை!! -சிறிகஜன் இல்லாமலே வழக்கு விசாரணை ஆரம்பம்- - Yarl Thinakkural

வித்தியா கொலையாளி சுவிஸ்குமார் தப்பியமை!! -சிறிகஜன் இல்லாமலே வழக்கு விசாரணை ஆரம்பம்-

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மஹாலிங்கம் சசிகுமாரை, பொலிஸ் தடுப்பில் இருந்து தப்பிச் செல்ல அனுமதித்தமை குறித்த வழக்கு விசாரணை தற்போது யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையுடன் தொடர்புடைய 7 பேருக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்ட விசேட தீர்ப்பாயம், மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வித்தியா கொலை குற்றவாளி தப்பியமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் இரண்டாவது சந்தேக நபர் இல்லாமல் விசாரணையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் சிறி கஜன் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வித்தியாவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து, பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி இருப்பதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

குறித்த அறிக்கையில் சிறிகஜன் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்தநிலையில் இரண்டாவது பிரதிவாதியான சிறிகஜன் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணையை முன்னெடுக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.
Previous Post Next Post