கோத்தா தனிச்சிங்கள தலைவர்!! -கூறுகிறார் ஞானசார தேரர்- - Yarl Thinakkural

கோத்தா தனிச்சிங்கள தலைவர்!! -கூறுகிறார் ஞானசார தேரர்-

ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் பொதுபலசேனா அமைப்பின தேவை இனிமேல் இல்லை. இதனால் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சிங்களதீவின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியோக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாங்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்த சிறந்த தலைவர் எமக்கு தற்போது கிடைத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தனர். ஆனால் நாங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டே தனிச்சிங்கள தலைவரொருவரை உருவாக்க முடியும் என்று தெரிவித்தோம். அது இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது என்றார்.
Previous Post Next Post