யாழ்.பல்கலை பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

குலேந்திரன் சிவராம் என்பவரே புதிதாக பேரவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

உடனடியாகச்  செயற்படும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந் நியமனம் தொடர்பான அறிவித்தல் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பிரிவு 444(1) (எii)  க்கு அமைவாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் பேரவைக்கு பதவிவழி உள்வாரி உறுப்பினர்களாக நியமனமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட ஒன்று அதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவது வழமையாகும்.

அதன் பிரகாரம் கடந்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையில் இருந்த 14 உள்வாரி உறுப்பினர்களுக்கு ஈடாக 15 வெளிவாரி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின் இந்த வருட முற்பகுதியில் இந்து கற்கைகள் பீடம் புதிதாக உருவாக்கப்பட்டதன் காரணமாகஇ உள்வாரியாக அதன் பீடாதிபதி உள்வாங்கப்பட்டதனால் அதனைச் சமப்படுத்தும் வகையில் புதிதாக வெளிவாரி உறுப்பினர் ஒருவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்திருக்கிறது.
Previous Post Next Post