தமிழர்களின் ஆணையை தாழ்மையோடு ஏற்போம்!! -நாமல் ராஜபக்ச- - Yarl Thinakkural

தமிழர்களின் ஆணையை தாழ்மையோடு ஏற்போம்!! -நாமல் ராஜபக்ச-

தமிழ் மக்கள் தமது ஜனநாயக பலத்தை நிரூபிக்க அணைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்கள் போடும் வாக்கின் மூலம் வெளியாகும் முடிவுகளை நாங்கள் தாழ்மையோடு ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்:-

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களாகிய நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள அதி உச்சமான ஜனநாயக உரிமைகளை சரியாகப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முழு உரித்துடையவர்கள் என்பதை உங்களிடம் விநயமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சில தீய சக்திகள் பல்வேறு திரிபு பட்ட கருத்துக்களை கூறி, உங்களைக் குழப்பி, தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளமையை எம்மால் உணர முடிகிறது. அவர்களின் அந்தத் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் வாக்களிப்பு அமைய வேண்டும்.

தமிழர்களிடம் உள்ள பலம் வாக்கு பலமாகும். தமிழர்களாகிய நீங்கள் வாக்களித்து, உங்கள் பலத்தினை நிரூபித்து, அதன் ஊடாக உங்கள் தேவைகளையும் உரிமைகளையும் நிறைவேற்றக் கூடிய பாரதீனப்படுத்த முடியாத ஜனநாயக உரித்துடையவர்கள்.

நீங்கள் தேர்தல்களில் எவ்வளவு ஈடுபாடு உடையவர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் பகுதிக்கு வரும் போதும், நான் காணும் சிலரிடம் கதைக்கும் போதும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதில் நீங்கள் மிக உறுதியுடன் உள்ளமையை நான் அறிவேன். அப்படிப்பட்ட உங்களைச் சிலர் பிழையாக வழிநடத்த முயற்சிகின்றமை எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.

அது மட்டுமல்லாது, இலங்கையின் தேர்தல்களில் நீங்கள் ஈடுபாடற்றவர்கள் என்பதை சர்வதேச நாடுகளிற்கு காட்டி, உங்கள் நாட்டில் வெளிநாடுகள் வைத்துள்ள நன் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதிலும் சிலர் ஈடுபாடு உள்ளனர். அவர்களை இனம் கண்டு உறுதியுடன் நீங்கள் வாக்களிப்பது காலத்தின் கட்டாயம்.

இன்று நீங்கள் இவ்வளவு சுதந்திரத்துடன் நடமாடுவதற்கு காரணம் யார் என்பது உங்களுக்கு தெரியும். 2009 ஆம் ஆண்டு இன்றைய எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச எடுத்த திடமான முடிவின் பலனாகவே இன்று முழு இலங்கையும் அமைதிக் காற்றை சுவாசிக்கின்றது.

அதேவேளை, தமிழ் மக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய தார்மீக உரிமை உண்டு.

நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும், உங்கள் தீர்ப்பை தாழ்மையோடு ஏற்றுக் கொண்டு, பிறக்கும் எமது புதிய ஆட்சியில் உங்களிற்கான சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்துடையவர்கள் நீங்கள் என்பதை நாம் உறுதிப்படுத்துவோம் என்றுள்ளது.
Previous Post Next Post