இரணைதீவு நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்திய கடற்படை!! - Yarl Thinakkural

இரணைதீவு நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்திய கடற்படை!!

இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர்.

குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் மக்கள் தெரிவித்த போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களிற்கான நடமாடும் சேவை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும், அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தது.

முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 3 ஆம் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இரணைதீவிற்குச் சென்று மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்வுகளை செய்திருந்தனர்.

இதனடிப்படையில் இன்று அம் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக 16 அரச நிறுவனங்களை இணைத்து நடமாடும் சேவை நடைபெற்றது.

நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியில் கடற்படை உத்தியோகத்தர் ஒருவரினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. குறித்த ஒலிப்பதிவு செய்யப்படும் சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்சிடம் தெரியப்படுத்தப்பட்டது.

உடனடியாகத அங்கு நின்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை செய்தவரை அழைத்த கனகராஜ் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
Previous Post Next Post