வித்தியா கொலையாளி உட்பட 2 பேருக்கு தூக்கு!! - Yarl Thinakkural

வித்தியா கொலையாளி உட்பட 2 பேருக்கு தூக்கு!!

புங்குடுதீவி மாணவி வித்தியா வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் வேறு ஒருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே இருவருக்கும் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது.

அத்துடன் எதிரிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்,  இருவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டது.

யாழ்.தீவகம் புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோமசுந்தரம்  சுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மது அருந்துவதற்காக அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்குச் சென்ற அவர் மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் செர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2011ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2018ஆம் ஆண்டு டிசெம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் முதலாவது குற்றச்சாட்டும் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையிலிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை 380ஆம் பிரிவின் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தொடர் விளக்கமாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார்.

முதலாவது சந்தேகநபர் சார்பில் அரச செலவில் மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி பி.அபிதனும் இரண்டாவது சந்தேகநபர் சார்பில் விஸ்வலிங்கம் திருக்குமரனும் முன்னிலையாகினர்.

வழக்கு இன்று (செப்ரெம்பர் 30) திங்கட்கிழமை தீர்ப்புக்காக கூப்பிடப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் எதிரிகள் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பளித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அவர்கள் இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தூக்குத் தண்டனையை விதித்த போது திறந்த மன்றின் மின்விசிறிகள் நிறுத்தப்பட்டும் மின்குமிழ்கள் அனைத்தும் அணைக்கப்பட்டன. மன்றிலிருந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றனர்.

தீர்ப்பு எழுதி ஒப்பமிட்ட பேனாவை நீதிபதி முறிந்து எறிந்தவுடன் நீதிமன்றம் கலைக்கப்பட்டது.

சிறிது நேரத்தின் பின் மீண்டும் மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இதேவேளை, இந்தக் கொலை வழக்கில் பிணையில் இருந்த வேளையிலேயே பூபாலசிங்கம் ஜெயக்குமார், 2015ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி மாணவி வித்தியாவின் கூட்டுக்கொலையிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாவுக்கு எதிராக மேன் முறையிட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!!
ஸ்ரீP லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பானர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோர் இணைந்தே குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச இலங்கையின் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடை நிறுத்துமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பிக்கக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post