Thursday, July 4, 2019

வித்தியா கொலை!! -சிறிகஜன் பக்கம் திரும்பும் விசாரணை-

புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா கொலை சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவிய முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ்  தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன்  மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேரை வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். முதலாவது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ஜோன்சன் முன்னிலையானார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இரண்டாவது எதிரி எங்கே? அவர் தொடர்பில் தகவல் உண்டா? என்று வழக்குத் தொடுனரிடம் மன்று கேள்வியெழுப்பியது.

இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

அத்துடன், இந்த வழக்கை முன்னெடுக்க சட்ட மா அதிபரால் சிறப்பு அரச சட்டவாதி சட்ட மா அதிபரால் நியமிக்கப்படுவார் எனவும் அரச சட்டவாதி மன்றுக்கு அறிவித்தார்.

இரண்டாவது எதிரி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கு விசாரணையை செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

Author: verified_user