கைவிசேட காசுக்காக சண்டை போட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்! - Yarl Thinakkural

கைவிசேட காசுக்காக சண்டை போட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்!

யாழ்.மாநகர சபையில் இன்று வழங்கப்பட்ட கைவிசேட பணத்திற்காக ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட 50 ரூபா கைவிசேட பணத்திற்காகவே அவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளார்.

மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது மாநகர சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 50 ரூபா பணம் கைவிசேடமாக வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட கைவிசேட பணம் சபையின் நிதிக்குழுவின் அங்கிகாரத்துடன் வழங்கப்படவில்லை என்றும், மாநகர சபை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து கைவிசேடம் வழங்கியுள்ளது என்று முன்னாள் முதல்வரும், இன்னாள் சபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குறை கூறியிருந்தார்.

குறித்த உறுப்பினர் அக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது சபையில் இருந்த எனைய உறுப்பினர்கள் சிரித்து ஆரவாரப்பட்டனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பாரம்பரிய முறையினை பின்பற்றுவதற்காக சபை உறுப்பினர்களுக்கு தலா 50 ரூபா கைவிசேடமாக வழங்கப்பட்டது. இதற்கான மொத்தம் ஆயிரத்து 500 ரூபா செலவிடப்பட்டது என்றார்.

இதற்கான நிதி குழுவின் அங்கிகாரத்தினை கோருவது பொருத்தமானதாக இருக்காது என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார். முதல்வரின் கருத்தினை சபை உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால் ஈ.பி.டி.பி உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சபையின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பிசுபிசுத்துப் போனது.
Previous Post Next Post