திலீபனின் புகைப்படம் மீட்ப்பு! -மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்- - Yarl Thinakkural

திலீபனின் புகைப்படம் மீட்ப்பு! -மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்-

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தியாகி திலீபனின் புகைப்படம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அதனையடுத்து சிற்றுண்டிச் சாலையை ஒப்பந்த அடிப்படையில் நடத்துபவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு முற்படுத்தப்பட்டார். அதற்கமைய சிற்றுண்டிச் சாலை நடத்துனர் வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிற்றுண்டிச் சாலை நடத்துனருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு சாட்சியாக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கிலும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரிடம் சாட்சியம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post