யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் மீட்கப்பட்டது. அதனால் சிற்றுச்சாலை நடத்துனரும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் இன்று 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் இருவரும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
Previous Post Next Post