படகில் தப்பிய 15 ஐ.எஸ் தீவிரவாதிகள்! - Yarl Thinakkural

படகில் தப்பிய 15 ஐ.எஸ் தீவிரவாதிகள்!

தேடப்படும் 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றின் மூலம் இலங்கையில் இருந்து இலட்சத்தீவை நோக்கிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, கேரளாவின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கடந்த 23 ஆம் திகதி கிடைத்த புலனாய்வு அறிக்கையையடுத்து, இந்தியாவில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு  இது குறித்த  முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமானதே என்ற போதும், இம்முறை தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளதால், சந்தேகத்துக்குரிய கப்பல்கள், படகுகளைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் கடற்படையினருக்கு எந்த தகவலும் உத்தியோ பூர்வமாகக் கிடைக்கவில்லை எனக் கடற்படையின் ஊடக பேச்சாளர் லெப்டினல் கொமன்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக் கடற்படையினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவல் உண்மையாயின் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Previous Post Next Post