இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோவை இளைஞர் ஆசிக் கூறியுள்ளார். கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உட்பட 7பேரை கோவை பொலிஸார் கடந்த செப்ரெம்பர் மாதம் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டது. கைதானவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான 7பேருக்கும் பிணை வழங்கி சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், கோவையில் கைதானவர்களுக்கும் தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிணையிலிருருக்கும் கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்கவே இந்திய உளவுத்துறை முயல்கின்றனர். எங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தற்போது நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளோம்.
கைது செய்யப்பட்ட போது எங்களை அடித்து சித்திரவதை செய்து வாக்கு மூலம் வாங்கினார்கள். வழக்கில் பிணை பெற்று வெளியில் வந்த கோபத்தில் எங்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பிருப்பதாக உளவுத்துறை தகவல் பரப்புகிறது. கைதாகியிருந்த போது உளவுத்துறை அதிகாரிகள் 3முறை காவலில் எடுத்து என்னிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க எங்கள் மீது பழியை போட பார்க்கின்றனர்.
ஐ.எஸ். அமைப்பை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான் அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். இலங்கையை சேர்ந்த ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே உளவுத்துறையின் நோக்கமாக இருக்கிறது. உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.