இலங்கைக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை - Yarl Thinakkural

இலங்கைக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு எச்சரிக்கைகுண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253பேர் பலியாகியுள்ளனர். 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இலங்கை இராணுவமும், பொலிஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். நாடு முழுவதும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன் தோட்டா, யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகளை எந்த உதவிக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்திய தூதரகங்களின் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறவுத்துறையின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post