இலங்கை குண்டு வெடிப்புக்கு முன்னர் கோவை சென்றவர் யார்? - Yarl Thinakkural

இலங்கை குண்டு வெடிப்புக்கு முன்னர் கோவை சென்றவர் யார்?


இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கோவைக்கு சென்று வந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் குறித்து இந்திய உளவுத்துறை விசாரித்து வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய முயன்றதாக கோவையை சேர்ந்த இருவர், சென்னையை சேர்ந்த நால்வர் என 6பேர் கோவை பொலிஸாரால் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஐ.எஸ்.ஆதரவாளர் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகாமை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் அடிப் படையில் இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறையை உஷார்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்திய அரசு மூலமாக இலங்கைக்கு முற்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இலங்கையின் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவர் கோவைக்கு வந்து சென்றதாகவும் அவர் கோவையின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகவும் கோவை மாநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த நபர் எதற்காக கோவை வந்தார், அவருடன் வேறு யாரேனும் வந்தனரா? அவரது பெயர், யாரை சந்தித்தார், எங்கெல்லாம் சென்றுள்ளார், அவருடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்து புலனாய்வுத்துறையும், பொலிஸாரும் இரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

Previous Post Next Post