போரால் 58 வீதத்தினருக்கு உளவியல் பாதிப்பு! -கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- - Yarl Thinakkural

போரால் 58 வீதத்தினருக்கு உளவியல் பாதிப்பு! -கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் 58 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வட பகுதியில் உள்ள 25 வைத்தியசாலைகளில் யுத்தத்தல் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த 1000 பேரிடம் இந்த முடிவை வெளியிட்ட ஆய்வாளர்கள் நேர்காணல் செய்துள்ளனர்.

இத்தகையவர்களிடம் உளவியல் பாதிப்பு சார்ந்த பிரச்சினைகளை அதிகளவில் அவதானிக்கு முடிந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இணங்கண்டு பேசிய பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனவர்களிடம் கவலை, மன அழுத்தம்,  தாக்கத்துக்குப் பிந்திய மனச் சோர்வு ஆகியன அவதானிக்கப்பட்டதாகவும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக் குழுவினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்திய 58 வீதம் பேரில் 83 வீதமானவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தாங்கள்  உள நல மருத்துவ நிபுனர்களை சந்தித்து ஆலோசனை பெறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வேலை வாய்ப்பின்மை, குறைந்த கல்வித் தரம் ஆகியனவும் மோசமான உளப் பாதிப்புக்களுக்கான காரணிகளாக உள்ளன.

இதேவேளை, போரால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விடவும் அதிகளவில் பெண்கள் உளப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உளவியல் பிரச்சினை தொடர்பான முதலாவது மிகப் பெரிய ஆய்வாக இந்த ஆய்வு அமைந்துள்ளதாக ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளின் பிரகாரம் வட பகுதியில் உள நல் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள அங்லியா றஸ்கின் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சனன் டோகேர்ட்டி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

போருக்குப் பின்னரான விளைவுகள், உடல் ரீதியாக காயங்கள் என்பன மோசமான உள தாக்கத்துக்கான பிரதாக காரணிகளாக உள்ளன என ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் சனன் டோகேர்ட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள ரீதியான பாதிப்புக்குள்ளான பெரும்பாலானோர் சரியான சிகிச்சைக்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

எங்களுடைய வேலைத்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக போர் காரணமாக உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உள நல சிகிச்சைகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இதன் மூலம் போரால் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுளவர்களின் பிரச்சினைகளுக்கு உதவி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என நாங்கள் கருதுகிறோம்.

இந்த திட்டத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்ய நாங்கள் எண்ணியுள்ளோம் எனவும் ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் சனன் டோகேர்ட்டி தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் குழுவின் இந்த அறிக்கை குறித்த முடிவு ஜேர்னல் பி.எம்.சி. என்ற மருத்துவ ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post