மகனுக்காக சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது!  - Yarl Thinakkural

மகனுக்காக சிறைச்சாலைக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது! 

யாழ்.சிறைச்சாலையில் உள்ள தனது மகனுக்காக கொண்டு வந்த உணவுப் பொதியில் கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு சென்ற என்ற வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை சந்திக்க அவரது தாயாருக்கு நேற்றுமுன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுமதி வழங்கப்பட்டது. 

அவரிடம் இரண்டு உணவுப்பொதிகள் இருந்தன. அவற்றைச் சோதனையிட்ட போது ஒன்றில் சுமார் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. 

வயோதிபப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். 

"சந்தேகநபர் தனது மகனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். அந்தவேளை, அங்கு வந்த ஒருவர் தனது உறவினர் தடுப்பில் இருப்பதாகவும் அவருக்கு சாப்பாடு வழங்கவேண்டும் தன்னிடம் அடையாள அட்டையில்லாத்தால் அனுமதி கிடைக்காது என்று தெரிவித்தார். அதனால் தனது உறவினருக்கான உணவுப் பொதியையும் சந்தேகநபரிடம் வழங்கி அதனை சேர்ப்பிக்குமாறு கேட்டார். 

அதனால் அவரது நிலையறிந்து சந்தேகநபர் அந்த உணவுப் பொதியையும் எடுத்துச் சென்ற போதே அதற்குள் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று வயொதிபத் தாயார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய மன்று, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
Previous Post Next Post