யாழ்.மாநகர எல்லைக்குள் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியதன் விளைவாகவே எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை யாழ்.மாநக சபையினல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தபால் மூலம் எனக்கு இராமநாதன் என்றவருடைய பெயர் குறிப்பிட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் எனது துணைவியாரின் தொலைபேசிக்கு புதைகுழியின் புகைப்படத்துடன், தொடக்கம் என்று எழுதப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்து.
இவை தொடர்பில் யாழ்.பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். முறைப்பாட்டின் அடிப்படையில் வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளேன்.
எனக்கு எதிரி என்று செல்லும் அளவிற்கு யாரும் இல்லை. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவங்களை தடுத்து நிறுத்தியிருந்தேன். இச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்று எமக்கான நீதி கிடைத்துள்ளது.
இவ்வாறு அத்துமீறும் செயற்பாடுகளை கூடுதலான அக்கறை எடுத்து தடுத்து நிறுத்தியதினால் எனக்கான கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றேன். இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளேன்.
அச்சுறுத்தலை அடுத்து காரியாலையம் மற்றும் எனது போக்குவரத்திற்கான பாதுகாப்பினை பொலிஸாரிடத்தில் கோருவதற்கும் எண்ணியுள்ளேன் என்றார்.