பெண்ணின் உயர்ச்சிக்கு உறுதி பூணுவோம்: -மகளிர் தின வழ்த்தில் பிரதமர்- - Yarl Thinakkural

பெண்ணின் உயர்ச்சிக்கு உறுதி பூணுவோம்: -மகளிர் தின வழ்த்தில் பிரதமர்-

நாட்டில் சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பாராட்டி ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும்  உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சர்வதேச மகளிர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான, சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளது. தற்போது புதிய உலகில் தொழிநுட்பம், தொடர்பாடல், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலை, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக காணப்படுகிறது.

அதேபோன்று உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் அளவிலாத அர்ப்பணிப்புக்கள், தியாகங்களைச் செய்து சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

அவள் இது வரை பெற்றுக்கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். ஏனெனில் பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றனர்.

கடந்த காலத்தில் எமது நாடு எதிர்நோக்கிய பல்வேறுபட்ட சமூக, அரசியல் பிரச்சினைகளின்போது பெண்கள் முன்வந்து அச்சமின்றி மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டமையினை நாம் அவதானித்தோம். பொது சமூக நலனுக்கான அவர்களது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும்.

'சுறுசுப்பானதொரு பெண் - அழகியதோர் உலகு' எனும் கருப்பொருளுடன் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம், மிகவும் சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பாராட்டி, ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம் என்றுள்ளது.
Previous Post Next Post