Monday, March 25, 2019

தினமும் 4 மணிநேர மின்வெட்டு!

ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த மின்சார விநியோகத்தை தடை செய்யும் முறைமை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது உள்ள வெப்பமான வானிலையில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு 4 மணி நேர மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியிலாளர் சங்கம், இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாலை 6.00 மணிமுதல், இரவு 7.00 மணிவரையும், 7.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையும், 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும், 9.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரையும் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேநேரம், சனிக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் பிற்பகல் 3.15 வரையும், பிற்பகல் 3.15 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார விநியோகத் தடை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user