யாழின் குடிநீர் தேவைக்கு 350 கோடியில் பாளியாற்று திட்டம்! -அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural

யாழின் குடிநீர் தேவைக்கு 350 கோடியில் பாளியாற்று திட்டம்! -அமைச்சு அறிவிப்பு-

சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ள யாழ்.மாவட்டத்திற்கான குடிநீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில், பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கப் போவதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீரை திசைத்திருப்பும் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை, கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் வவுணிக்குளம், கொள்ளவிளான்குளம், அடம்பன்குளம், மல்லாவிகுளம் போன்றவை சார்ந்த பிரதேசங்கள் அனுகூலம் பெறும்.

இந்தத் திட்டத்திற்கான செலவினம் 350 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post