வியட்நாம் சென்றடைந்த வடகொரிய ஜனாதிபதி - Yarl Thinakkural

வியட்நாம் சென்றடைந்த வடகொரிய ஜனாதிபதிஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியாலிருந்து, சீனா வழியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி கிம் ஜோங் உன் இன்று வியட்நாமை சென்றடைந்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் ரயிலிலே தனது பயணத்தை மேற்கொள்கின்றார். முன்னர் தென் கொரியா, சீனாவுக்கும் அவர் ரயிலிலே சென்றார். பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலிருக்கும் கிம் ஜோங் உன்னின் ரயிலில் சீனாவின் எல்லைப்பகுதியை அண்மித்துள்ள டாங் டாங் ரயில் நிலையத்தை அவர் நேற்று சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் ஊடாக ஹனோய் நகரை நோக்கி கிம் புறப்பட்டார்.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தற்போது இரண்டாவது கட்ட சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது.

சுமார் 44 ஆண்டுகளுக்கு பின்னர் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர் காலக் கூட்டாளியான வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

ட்ரம்ப்-கிம் இடையிலான இப்பேச்சுவார்த்தை நாளையும், நாளைமறுதினமும் நடைபெறவுள்ளது. ட்ரம்ப் - கிம் உச்சி மாநாட்டுக்கு வியட்நாமை தேர்ந்தெடுத்தன் காரணம், வியட்நாமால் உச்சி மாநாட்டுக்கு தேவையான உயர் பாதுகாப்பு சூழலை வழங்க முடியும்; என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post