கேப்பாப்பிலவிலும் பாரிய மனிதப் புதைகுழி! - Yarl Thinakkural

கேப்பாப்பிலவிலும் பாரிய மனிதப் புதைகுழி!

மன்னார் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம்.

அப்புதைகுழியும் வெளிவந்துவிடும் என்று அஞ்சிய இராணுவம் அக் காணிகளை விடுவிக்க பின்னடிக்கின்றது.

இவ்வாறு பல தடைகளையும் தாண்டி தொடர்ச்சியான நில மீட்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற சுவிஸ் தூதரக அதிகாரிகளிடமே அம்மக்கள் இச் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

நந்திக் கடலுக்கு அண்மையாகவுள்ள மக்களின் உறுதிக் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோரப் பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளைப் படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள்.

தற்போது போராட்டம் இடம்பெறும் கொட்டிலுக்கு அருகிலும் கிணறு ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அதுகூட இல்லை.

விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த 25 இற்கும் மேற்பட்ட கிணறுகளைப் படையினர் இடம் தெரியாதவாறு மூடியுள்ளார்கள். இது எங்களுக்கு சந்கேத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போரின்போது மன்னார் மனிதப் புதைகுழி போன்று ஏதாவது புதைகுழிகளை அல்லது தடயங்களை கிணறுகளில் இட்டு மூடியுள்ளனரா எனச் சந்தேகம் உள்ளது என்றனர்.
Previous Post Next Post