ட்ரம்பை சந்திக்க ரயிலில் புறப்பட்ட கிம் - Yarl Thinakkural

ட்ரம்பை சந்திக்க ரயிலில் புறப்பட்ட கிம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திப்பதற்காக வியட்நாம் ஹனோய் நகருக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ரயில் மூலமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐ.நா.பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா சம்பாதித்து வந்தது. குறிப்பாக இவ்விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர்  மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.
இச்சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறுமென கிம் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

இதற்கு தீர்வுகாண இரண்டாவது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச ட்ரம்ப், கிம் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். இதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இம்மாதம் 27,28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ட்ரம்புடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, கிம் புறப்பட்டுள்ளார்.

பியாங்யாங் நகரிலிருந்து ரயிலில் புறப்பட்டுள்ள கிம் 4,500கி.மீற்றர் தூரம் சுமார் 60மணி நேரம் பயணம் மேற்கொண்டு  வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடையவுள்ளார்.

Previous Post Next Post