இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைக்கு ஆதாரம் இல்லை! -வீடியோக்கள் போலி என்கிறார் மஹிந்த- - Yarl Thinakkural

இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைக்கு ஆதாரம் இல்லை! -வீடியோக்கள் போலி என்கிறார் மஹிந்த-

இறுதிப் போரில் இசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் கைதுசெய்த பின் சுட்டுக்கொன்றமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

போலிக் காணொளிகளையும், புகைப்படங்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் தொடர் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். அவற்றில் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்லர். அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களை பிரபாகரன் வழங்கியிருந்தார்.

அதேவேளை, இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இவர்கள் உள்ளிட்ட பல போராளிகளின் உயிரிழப்புகளுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும். நாம் பொறுப்பல்ல.

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12 ஆயிரத்து 500 போராளிகளை புனர்வாழ்வளித்து நாம் விடுதலை செய்தோம்.

இப்படிச் செய்த எம் மீதும் எமது போர் வீரர்களான படையினர் மீதும் சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டன.

எம்மைத் பழிதீர்க்கும் வகையில் புலிகள் அமைப்புகள் தயாரித்த இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் ஒத்துழைத்தமையை நினைக்கும்போது கவலையாக உள்ளது.

ஆனால், இந்தத் தீர்மானங்களை வைத்து எமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.
Previous Post Next Post