போதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு நீதவானின் அதிரடி உத்தரவு!  - Yarl Thinakkural

போதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு நீதவானின் அதிரடி உத்தரவு! 

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் 30 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் சாரதி அனுமதிப் பத்திரமும் இருந்திருக்கவில்லை. சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸார் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், எதிரியை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இருவரை தலா 50 மணித்தியாலயங்கள் சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். இந்த வழக்குகள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. 

இளைஞர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதனையடுத்து அவர்கள் இருவரையும் தலா 50 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்தப்பணியில் ஈடுபடுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சமுதாய சீர்திருத்த திணைக்களத்துக்கு நீதிவான் கட்டளையிட்டார். வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
Previous Post Next Post