யுத்தக் குற்றங்களை மறப்போம்! -கிளிநொச்சியில் ரிணில்- - Yarl Thinakkural

யுத்தக் குற்றங்களை மறப்போம்! -கிளிநொச்சியில் ரிணில்-

யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் உள்ளன.

இவை அனைத்துமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான வழக்குகளைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. நாம் உண்மையைப் பேசி, கவலையைத் தெரிவித்து, ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கோரி , நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்வோம்.

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என இரு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது உண்மையைக் கூறி, மன்னிப்புக் கோரி, அவற்றை நிறைவு செய்வதே வெற்றியாகும்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னரும் பாதுகாப்புப் பிரிவினரே அனைத்துச் சேவைகளிலும் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் நிறைவுக்கு வரும்.

இரு தரப்பினருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படும். அனைத்தையும் மன்னித்து ஏற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. நாட்டில் பல கடன் சுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடக்கைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனைச் சீர்குலைக்க முடியாது. காரணம் எமக்கிடையில் நல்லிணக்கம் காணப்படுகின்றது.

எனவே, நாம் பயமின்றி இவற்றுக்கு முகங் கொடுத்து சிறந்தவொரு பயணத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post