பாடலை கொடுக்க மறுத்த வைரமுத்து - Yarl Thinakkural

பாடலை கொடுக்க மறுத்த வைரமுத்துசீமானுக்காக எழுதிய பாடலை பிரபல இயக்குநர் சீனுராமசாமி 30இலட்சம் ரூபா தருவதாக கேட்ட போதும், கவிஞர் வைரமுத்து அப்பாடலை கொடுக்க மறுத்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ்-சீமான் நடிப்பில் இரா.சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அமீரா. இப்படத்தில் அனுசித்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சீமானின் தம்பி திரைக்களமும் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இந்நிலையில் இப்படத்துக்காக எழுதிய பாடல் வரிகளை இயக்குநர் சீனு ராமசாமி கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், அமீரா திரைப்படத்தில், ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனை திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டு தொழிலையே மாற்றுகிறது. அவன் திருந்துகிறான்.

அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பது தான் பாட்டு. 15நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்நேரத்தில் தொலைபேசி அழைப்பு எடுத்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அப்பாடலை படித்து காட்டியிருக்கிறார்.

உணர்ச்சி வசப்பட்ட சீனுராமசாமி, இப்பாடல் என் கதைக்குத்தான் பொருந்தும், இதை எனக்கு தான் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
எனினும் வைரமுத்து இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு. கொடுத்த வாக்கு மாறக்கூடாது என கூறி மறுத்துள்ளார். ஆனால் இயக்குநர் இப்பாட்டுக்கு மட்டும் 30இலட்சம் தருவதாக கேட்டுள்ளார். அதற்கு வைரமுத்து 10ரூபா கொடுத்தாலும் சீமானுக்கு தான் இந்தப் பாட்டு என சிரித்தவாறு சமாதானப்படுத்தியுள்ளார்.

Previous Post Next Post