கடல் கொந்தளிக்கும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- - Yarl Thinakkural

கடல் கொந்தளிக்கும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை-

நாட்டை ஊடறுத்து இன்றும், நாளையும் கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்கிழமை மழையுடன் கூடிய வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவித்துள்ள அந்த திணைக்களம்,  மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதுடன், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவில் திணைக்களம் கோரியுள்ளது.
Previous Post Next Post