தி.மு.க.-அ.தி.மு.கவினர் இடையே கடும் மோதல் - Yarl Thinakkural

தி.மு.க.-அ.தி.மு.கவினர் இடையே கடும் மோதல்திருச்சியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதலில், அ.தி.மு.க. எம்.பி.குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருச்சி அ.தி.மு.க. செயலாளரரும், எம்.பி.யுமான குமார் அப்பகுதியில் சுமார் ரூ.21இலட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். 

பேருந்து நிலையம் அமைக்கவிருந்த இடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் முறையாக அனுமதி பெறுவதற்காக குமார் எம்.பி. தரப்பு விண்ணப்பித்துள்ளனர். அப்பகுதியில் தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜின் அலுவலகம் உள்ளது. அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் தங்களது இடத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழைய பேருந்து நிலைய கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. அதற்காக குமார் எம்.பி.பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடங்களை சமன் செய்ய இயந்திரங்களை அனுப்பி வைத்தார். இதைப்பார்த்த தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜ், ரயில்வே துறைக்கு தகவல் கொடுத்து அனுமதியில்லாமல் பேருந்து நிலையம் அமைப்பதாக முறையிட்டார். விரைந்து சென்ற மத்திய ரயில்வே படையினர் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

அ.தி.மு.க. எம்.பி. மீது தாக்குதல்

அவ்வழியாக தனது வீட்டுக்கு சென்ற குமார் எம்.பி. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை கவனிக்க தனது காரிலிருந்து இறங்கினார். அப்போது அங்கு இயந்திரங்களை காணவில்லை என்பதால் அதுகுறித்து விசாரித்தார். அப்போது தி.மு.க. தரப்புக்கும் குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திருச்சி மாவட்ட மாணவர் அணி நிர்வாகி விஜி மற்றும் குமார் எம்.பி. ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் குறித்து தகவலறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.


Previous Post Next Post