கொக்குவிலில் பெற்றோல் குண்டு தாக்குதல்! -வாகனங்கள் தீக்கிரை- - Yarl Thinakkural

கொக்குவிலில் பெற்றோல் குண்டு தாக்குதல்! -வாகனங்கள் தீக்கிரை-

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சற்று முன்னர் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் சற்று முன்னர் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் ரக வாகனம் , 2 மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் , வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன.

வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , வீட்டரால் யாழ்.  மாநகர சபை தீயணைக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினரால் வாகனங்களின் தீயினை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போதிலும், வீட்டின் மீது பரவிய தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது வீட்டார் வீட்டினுள் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீட்டரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post