பாகிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் கடும் தாக்குதல் - Yarl Thinakkural

பாகிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் கடும் தாக்குதல்


பாகிஸ்தான் எல்லையை அண்மித்த பகுதியிலிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 200 முதல் 300 பேர் வரையான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் திகதி மத்திய பொலிஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயற்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படுமென மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயற்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் இந்திய இராணுவம் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது. 

இந்திய விமானப்படை தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை வீசியதாகவும், இத்தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானங்கள் 12 பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்தியா இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. அனைவருமே ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post