ரணிலின் ஆட்சியைக் கவிழ்ப்பேன்! -இந்தியாவில் மஹிந்த சூளுரை- - Yarl Thinakkural

ரணிலின் ஆட்சியைக் கவிழ்ப்பேன்! -இந்தியாவில் மஹிந்த சூளுரை-

தவறான பாதையில் பயணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து அரசமைப்பில் திருத்தத்தை
மேற்கொள்வேன் என்று எதிர்கட்சி தலைவவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ச, பெங்களூரில் ‘த ஹிந்து’ பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் இன்று பங்கேற்று உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் இரண்டு முறை பாரதூரமான முறையில் வீழ்ச்சியடைந்தன. 1980ஆம் ஆண்டிலும், 2014ஆம் ஆண்டிலும் இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டன.

2014ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த கட்சி இலங்கை உடனான உறவுகளை மதிக்கும்போது, ஆட்சிக்கு வரும் கட்சியும் அதனைச் செய்ய வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் என்பது மக்களைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. இலங்கையில் மக்களைத் திருப்திப்படுத்த முடியும். ஆனால், அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முடியாது. அதுதான் எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை

இந்தியாவும் இலங்கையும் அயல் நாடுகள் என்பதுடன் ஒரே குடும்பம். குடும்பப் பயணம் எப்போதும் சுமுகமாக இருப்பதில்லை. செயற்பாட்டு ரீதியான உரையாடல்கள் மூலம் தவறான புரிதல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

இலங்கையும் இந்தியாவும் சுயநலத்துக்காகச் செயற்பட்ட சிலரால் அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியிருந்தது. அந்தவகையில் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இந்தியாவில் பாதுகாப்புப் பெற்றதுடன், பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் உயிரையும் இறுதியில் பறித்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்திலேயே இலங்கை – இந்திய உறவில் பிளவு ஏற்பட்டது. இதன்போது இழைக்கப்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தவறான பாதையில் பயணிக்கின்றது. இந்த ஆட்சியைக் கவிழ்த்தே தீருவேன்.

இலங்கையின் தற்போதைய அரசமைப்புக்கமைவக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட முடியாது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரைப் போட்டியிட வைப்பேன். அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார். அவர் வெற்றிபெற்ற பின்னர் அரசமைப்பில் நான் திருத்தத்தை மேற்கொள்வேன் என்றார்.
Previous Post Next Post