“விளையாட்டிலும் கல்வியிலும் சாதணை” -யாழ் மண்ணுக்கு பெருமைசேர்க்கும் சாத்விகா- - Yarl Thinakkural

“விளையாட்டிலும் கல்வியிலும் சாதணை” -யாழ் மண்ணுக்கு பெருமைசேர்க்கும் சாத்விகா-

யாழ் மண்ணிற்கு விளையாட்டு மற்றும் கல்வியில் பெருமை சேர்க்கும் வகையில் தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் பல பதக்கங்களைப் பெற்றவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 2 ஏபி பெற்று கல்வி, விளையாட்டு இரண்டிலும் சாதித்த அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி வ.சாத்விகாவிடம் யாழ்.தினக்குரலின் ஆடுகளம் விளையாட்டுப் பகுதியினர் விசேட நேர்காணல் ஒன்றினை செய்துள்ளனர்.

இந்த நேர்காணலில் விளையாட்டிலும் கல்வியிலும் ஒரே நேரத்தில் எவ்வாறு பிரகாசிப்பது என்பது தொடர்பில் சாத்விகா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணல் வருமாறு:-

உங்களைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள்? 

எனது பெயர் வவானந்தன் சாத்விகா. நான் அளவெட்டி கணேஸ்வரம் கிராமத்தில் வசிக்கின்றேன். எனது  தந்தை ஓர் மேசன் தொழிலாளி.

நீர் இதுவரை விளையாட்டுத்துறையில் சாதித்த சாதனைகள் யாவை?

நான் சிறுவயதில் இருந்தே விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தேன். மற்றும் எனது  பெற்றோர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்புமே நான் இவ்வாறு சாதனை படைக்க காரணமாயிருந்தது. முதன் முதலில் 2014 ஆம் ஆண்டிலே கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டேன். பின்னர் தொடர்ச்சியாக 2 வருடங்கள் தேசிய மட்டத்தில் என்னால் சாதிக்க முடியவில்லை.

ஆனாலும் எனது பயிற்றுவிப்பாளர்கள் என்னைத் தளரவிடவில்லை. தொடர்ந்தும் 2017 ஆம் ஆண்டு பல போட்டியில்  கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றேன். பின்னர் அதே வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டேன்.

கல்வியையும் விளையாட்டையும் எவ்வாறு ஒரேநேரத்தில் உங்களால் கற்கமுடிந்தது?

விளையாட்டுத்துறையிலும் ஈடுபட்டுக்கொண்டு கல்வியிலும் என்னால் சாதிக்க முடிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் 2ஏபி சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் 85 ஆவது நிலையினையும் பெற்றுள்ளேன்.

இப்பெறுபேற்றைப் பெறுவதற்கு எனது பெற்றோர் ,பாடசாலை அதிபர், கற்பித்த ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களின் ஒத்துழைப்பே காரணமாகும்.

எமது பாடசாலையில் சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். எனக்கு உயர்தரத்தில் கற்பித்த   த.வாசுதேவன் ஆசிரியர் , இ.ஞானேஸ்வன் ஆசிரியர், இ.நவகேதீஸ்வரன் ஆசிரியர் ஆகியோர் சிறந்த முறையில் கற்பிப்பார்கள். நான் எந்த நேரத்தில் சென்று சந்தேகங்களை கேட்டாலும் எதுவித தயக்கமும் இன்றி எனக்கு விளக்கமளிப்பார்கள்.

அடிக்கடி என்னை நன்றாகப் படிக்க வேண்டும் என ஊக்கமளிப்பார்கள். அவ்வாறே அதிபர், எனது விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள். எனக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களிடம் எனது பரீட்சைப் புள்ளிகள் பற்றி விசாரிப்பார்கள். இவ்வாறு எமது பாடசாலையில் உள்ள சிறந்த ஆசிரியர்களை எண்ணி சந்தோசமடைகின்றேன்.

கல்விக்கு விளையாட்டு தடையாக அமையுமா?

கல்விக்கு எப்போதும் விளையாட்டுக்கு தடையாக அமையாது. விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதால் எமது உடலானது சிறந்த ஆராக்கியத்துடனே காணப்படும். இது கல்விகற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். மற்றும் வேறு இடங்களுக்குச் சென்று பல மாணவர்களுடன் பழகுவதால் புது அனுபவங்களையும் பெறக்கூடியதாக உள்ளது. விளையாட்டின் மூலம் நாம் பெறுகின்ற சான்றிதழ்கள் பல்கலைக்கழகங்களுக்கு சிறந்த அனுமதிகளைப் பெறுவதற்கு உதவுகின்றது.

விளையாட்டில் ஆர்வம் காட்டும் பிள்ளைகளை தடுக்கின்ற பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

ஒருசில பெற்றோர் மத்தியில் விளையாட்டில் ஈடுபடுவதால் தம்பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் காணப்படுகின்றது. ஆனால் இது மாற வேண்டும். இதற்கு எமது பாடசாலையில் விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்ற மாணவர்களின் சிறந்த பெறுபேற்றினாலே மாற்றமுடியும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறந்த ஊக்கத்தை வழங்க வேண்டும்.

 உமது விளையாட்டுச்  சாதனைக்கு காரணமாக அமைந்தவர்கள் யார்?
நான் முதலில் கோலூன்றிப் பாய்தலை  த.பாகீஸ்வரன் ஆசிரியரிடமே கற்றுக்கொண்டேன். அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்  பா.பிரதீபன்  ஆசிரியரிடம் பயிற்சியைப் பெற்றுக்கொண்டேன்.

பாகீஸ்வரன் ஆசிரியர் இடமாற்றம் பெற்று சென்றதன் பின்னும் எமக்கு பயிற்சியளிப்பதற்கு பாடசாலைக்கு வருவார். எனது பயிற்றுவிப்பாளர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் நான் சாதனைபடைப்பதற்கு காரணமாயிருந்தது. மற்றும் எனது பெற்றோர் , அதிபர், ஏனைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வருங்காலத்தில் விளையாட்டில் சாதிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு நீர் கூறும் அறிவுரை யாது?

எமது வாழ்க்கைக்கு கல்வி மட்டுமல்லாது விளையாட்டுத்துறையும் முக்கியமானதாகும். வருங்கால விளையாட்டுத்துறை மாணவர்கள் சிறந்த முறையில் பயிற்சியை பெற்று பலசாதனைகளைப் புரிய வேண்டும்.

விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் போது அதில் தமது கவனத்தையும் அதேபோல் அனைத்து நேரத்திலும் கல்வியில் தமது கவனத்தை செலுத்த வேண்டும். காலையிலும் மாலையிலும் சிறந்த முறையில் நேரத்தை ஒதுக்கி பயிற்சிகளில் ஈடுபடுவதோடு கல்வியைக் கற்று சிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டும்.

விளையாட்டின் மூலமா கல்வி மூலமா வாழ்க்கையில் சாதிக்க முடியும்?

விளையாட்டும் கல்வியும் எமது வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். ஒவ்வொரு மாணவரும் கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுபடவேண்டும். விளையாட்டினால் எமது திறமைகள் வளர்க்கப்படுகின்றது. கல்வி, விளையாட்டு என இரு துறைகளிலும் ஈடுபடுவதால் சமூகத்தில் சிறந்த ஆளுமையுள்ள மாணவனாக திகழமுடியும்.

விளையாட்டுக்  கல்விக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கி சாதிக்க முடிந்தது. கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறே எனது பயிற்றுவிப்பாளர்கள் விளையாட்டுப் பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கி தந்தனர்.

காலையில் ஒரு மணித்தியாலமும் மாலையில் இரண்டு மணித்தியாலங்களும் பயிற்சிகள் நடைபெறும். போட்டிகளுக்கு செல்லுகின்ற வேளை வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றவேளை குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் அப்பாடங்களை மீண்டும் கற்பிப்பார்கள். இதனால் எனது கல்விக்கு எவ்வித இடையூறும் இன்றி இரு துறைகளிலுமே என்னால் கவனம் செலுத்தமுடிந்தது.
Previous Post Next Post