-வடக்கில் கஞ்சா வேட்டை- 380 கிலோ கஞ்சா மீட்பு: 40 பேர் கைது! - Yarl Thinakkural

-வடக்கில் கஞ்சா வேட்டை- 380 கிலோ கஞ்சா மீட்பு: 40 பேர் கைது!

வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாள்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசந்த் பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாள்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கஞ்சா கைப்பற்றப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் குறைந்தளவு கஞ்சா மீட்கப்பட்டது.

வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என யாழ்ப்பாணத்தில் 29 பேரும், வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 4 பேரும், கிளிநொச்சியில் 3 பேருமாக 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
Previous Post Next Post