-உணவுக்குள் மட்டத்தேள்- யாழ்.உணவகத்தின் அசிங்கம்! - Yarl Thinakkural

-உணவுக்குள் மட்டத்தேள்- யாழ்.உணவகத்தின் அசிங்கம்!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள உணவகத்தில்  வாங்கிய மதிய உணவுப் பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள  உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வழமை போன்று  இன்று வெள்ளிக்கிழமை மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று உணவினை பிரித்து பார்த்த போது, கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது.

இதனால் அவர் வாடிக்கையாக செல்லும் அந்த உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
எனினும் உணவக உரிமையாளர், வாடிக்கையாளரை உதாசீனம் செய்ததுடன் உணவுப் பொதியை மீளப்பெற்று வீசி அச்சுறுத்தியுள்ளார்.

உணவக உரிமையாளர் மீது வாடிக்கையாளர் பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன்  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  முறைப்பாட்டினை செய்துள்ளார்.
Previous Post Next Post