சவேந்திர சில்வாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! -ஜஸ்மின் சூக்கா வலியுறுத்து- - Yarl Thinakkural

சவேந்திர சில்வாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! -ஜஸ்மின் சூக்கா வலியுறுத்து-

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இந்த ஆவணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

எனது குழுவினர் பல வருடங்களாகச் சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாக சவேந்திர சில்வா தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை. எனவே சவேந்திர சில்வா உடனடியாகப் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும் என ஜஸ்மின் சூக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post